கவலைகள் தீர்க்கும் கார்த்திகை ஞாயிறு அகோரமூர்த்தி வழிபாடு..! - Neerthirai

Breaking

Post Top Ad

கவலைகள் தீர்க்கும் கார்த்திகை ஞாயிறு அகோரமூர்த்தி வழிபாடு..!

நவகிரகங்களில் கல்விக்கும் சகல வித்யைகளுக்கும் அதிபதியாகத் திகழ்பவர் புத பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலுக்குன்றி இருந்தால், அவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அருள்மிகு சுவேதாரண்யேசுவரையும் புதன் பகவானையும் வழிபட்டால், தோஷங்கள் விலகும்.வகிரகங்களில் கல்விக்கும் சகல வித்யைகளுக்கும் அதிபதியாகத் திகழ்பவர் புத பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலுக்குன்றி இருந்தால், அவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அருள்மிகு சுவேதாரண்யேசுவரையும் புதன் பகவானையும் வழிபட்டால், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

காசிக்கு நிகரான தலங்களாகச் சொல்லப்படும் ஆறு தலங்களில் திருவெண்காடும் ஒன்று. இந்தத் தலத்தில் சுயம்புவாகத் தோன்றி அருள்புரியும் சிவபெருமானை சூரியன், சந்திரன், அக்னி, புதன் ஆகியோர் வழிபட்டிருக்கிறார்கள். கோயிலில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இந்தக் கோயிலில் ருத்ர பாதம் வடவால விருட்சத்தின் கீழ் உள்ளது. சுவாமியின் திருப்பெயர் அருள்மிகு சுவேதாரண்யேசுவரர்; அம்பிகை பிரமவித்யாம்பிகை.

இந்தக் கோயிலில் புத பகவானுக்கு தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. இவருக்குப் பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பும் காரமும் சேர்த்து நைவேத்தியம் செய்து வழிபட்டால், புதன் கிரகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். நரம்பு தொடர்புடைய அனைத்து பிணிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் நாம் சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்றான அகோர மூர்த்தி வடிவத்தைத் தரிசிக்கலாம். சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்று ஐந்து முகங்கள் உண்டு. அவற்றுள் முதல் நான்கு முகங்களை நாம் தரிசிக்க முடியாது. ஆனால், ஐந்தாவது முகமான அகோர முகத்தை நாம் தரிசிக்க முடியும். அதற்கு நாம் செல்லவேண்டிய தலம்தான் திருவெண்காடு. 'கோரம்' என்றால் பயங்கரம்; 'அகோரம்' என்றால் அழகிய என்று பொருள். சிவபெருமானின் ஐந்தாவது முகத்துக்கு உரிய வடிவமான அகோரமூர்த்தி, தென் திசை நோக்கியவர். தீயவற்றை அழிப்பதற்கு வழிபடவேண்டிய மூர்த்தி இவர்.மருத்துவாசுரன் என்ற அசுரன் கடலுக்கடியில் நின்று தனது மூச்சை அடக்கி சிவனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனுடைய தவத்தை மெச்சிக் காட்சியளித்த சிவபெருமானிடம், அவருடைய திரிசூலத்தையே வரமாகப் பெற்றான். சிவபெருமானின் சக்தி மிக்க ஆயுதமான சூலாயுதத்தையே வரமாகப் பெற்றுவிட்ட ஆணவத்தில், விண்ணுலக தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்களைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், நந்திதேவரை அழைத்து மருத்துவாசுரனுக்கு அறிவுரை சொல்லி வரும்படி அனுப்புகிறார்.

சிவபெருமானின் உத்தரவின்படி அசுரனிடம் சென்ற  நந்திதேவர், அவனுக்குப் பல வகைகளிலும் அறிவுரை கூறுகிறார். சிவபெருமானின் தூதுவராக வந்த நந்திதேவரை மதிக்காமல் அவருடன் போர் செய்தான். ஈசன் தனக்குக் கொடுத்த திரிசூலத்தால் நந்திதேவரைத் தாக்கினான். தன்னைத் தாக்குவது சிவபெருமானின் ஆயுதம் என்பதால், நந்திதேவர் தடுக்கவில்லை. அதன் காரணமாக அவருடைய கொம்புகள் உடைந்ததுடன், உடலிலும் ஒன்பது இடங்களில் காயம் ஏற்பட்டது. (கொம்பு முறிந்த நிலையில் உடலில் ஒன்பது காயங்களின் தழும்புகளுடன் கூடிய நந்தியை இன்றும் ஆலயத்தில் தரிசிக்கலாம்)
நந்திதேவருக்கு மருத்துவாசுரன் இழைத்த கொடுமையைக் கண்டு கோபம் கொண்ட சிவபெருமான், கரிய உருவம் கொண்டு, 14 பாம்புகளைத் தன் உடலில் தவழவிட்டு, மணிமாலை அணிந்து, எட்டு பைரவர்களுடன் அகோர மூர்த்தியாகத் தோன்றினார். அவரைக் கண்டவுடன் மனம் திருந்திய அசுரன், சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான். அவனுக்கு அபயம் அளித்த அகோரமூர்த்தியிடம், ''ஐயனே, என் ஆணவம் போக்கி, அபயம் அளித்த தங்களை வந்து தரிசித்து வழிபடுபவர்களுக்கு யமபயம், பித்ருதோஷம், நவகிரக தோஷம் போன்ற தோஷங்களை நீக்கி அருள்புரியவேண்டும்'' என்று வரம் கேட்டான். சிவனாரும் அப்படியே வரம் கொடுத்து மறைந்தார்.இந்தத் தலத்துக்கு வந்து அகோரமூர்த்தியை வழிபட்டால், அஷ்ட பைரவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.அகோரமூர்த்தி தோன்றியது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான். எனவே, இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அகோரமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக கார்த்திகை மற்றும் ஆவணி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. கார்த்திகை மாத முதல் ஞாயிறு அன்று இரவு 10 மணிக்கு அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கார்த்திகை மாத மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 2-ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் 11 மணி வரை அருள்மிகு அகோரமூர்த்திக்கு பல்வகையான திரவியங்களால் அபிஷேகங்களும், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறும். தொடர்ந்து 12 மணியளவில் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேவார இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த சிறப்பு வைபவத்தில் கலந்துகொண்டு அகோரமூர்த்தியை வழிபடுபவர்களின் அனைத்து தோஷங்களும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Post Bottom Ad