ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வம்பில் மாட்டிக் கொண்ட விராட் கோலி


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு சற்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ ஓய்வு அளித்தாலும், கோலி தொடர்பான சர்ச்சைகள் நான் ஸ்டாப்பாக தொடர்கின்றன.
கோலி கடந்த 5-ம்தேதி பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், இந்திய பேட்டிங்கை விமர்சித்து விராட்கோலிக்கு வாழ்த்து கூறியிருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “ இந்திய பேட்ஸ்மேன்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதை நான் ரசித்து பார்க்கிறேன்” என்று கூறியிருந்தார்.
களத்தில் வீரர் ஒருவர் விமர்சித்தாலே விராட் கோலி சும்மா விட மாட்டார். ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இதுபோன்ற கருத்தை தெரிவித்தது கோலிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஒரு வீடியோ பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அந்த ரசிகரை குறிப்பிட்டு, “ நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உலகில் எங்காவது ஒரு மூலைக்கு சென்று விடுங்கள்.
இந்தியாவில் இருந்து கொண்டு ஏன் மற்ற நாட்டு விளையாட்டு வீரர்களை ரசிக்கிறீர்கள்?. நீங்கள் என்னை விரும்பவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், வெளிநாட்டு வீரர்களை ரசிக்கும் நீங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நான் எண்ணவில்லை. எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உணருங்கள்” என்று பேசியுள்ளார்.
இதற்கு போதுமான ஆதரவு ட்விட்டரில் கிடைக்கவில்லை. இந்த வீடியோவை டேக் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
நரேஷ் குரைஜாம் என்பவர் விராட் கோலிக்கு அளித்துள்ள பதிலில்,
விராட் கோலி திருமணத்தை வெளிநாட்டில் முடித்துக் கொள்வார்.
மற்ற விளையாட்டுகளில் வெளிநாட்டு வீரர்களை சப்போர்ட் செய்வார்
இந்தியாவின் பூர்வீக விளையாட்டான கபடியை விளையாடாமல் கிரிக்கெட்டை விளையாடுவார்.
வெளிநாட்டு ஆடைகளை அணிந்து கொண்டு, வெளிநாட்டு மொழிகளை பேசுவார்.
இவருக்கு ரசிகரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மற்றொரு நபர் அளித்துள்ள பதிலில், விராட்கோலி ஏன் அரசியல்வாதி போன்று பேசுகிறார். கோலியின் பதில் ரசிகர்களுக்கு அச்ச உணர்வை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், விராட் கோலியின் விருப்பமான வீரர் தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ் என்று பதிவிட்டு, அதனை கோலி தெரிவித்த வீடியோவையும் இணைத்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடிப்பு : 725 வழக்குகள் பதிவு 15 பேர் விடுதலை

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 4 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், கடலூர், விழுப்புரம், ராசிபுரம், கொடைக்கானல், நெல்லை, கோவை என பல நகரங்களிலும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். விருதுநகரில் 13 வழக்குகளை பதிவு செய்த போலீசார், சாத்தூர் - 15, சிவகாசி - 16, அருப்புக்கோட்டை - 7 , திருச்சுழி - 5, ஸ்ரீ வில்லிபுத்தூர் - 12 மற்றும் ராஜபாளையம் 12 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். பல இடங்களில், பிடிபட்ட சிறுவர்கள், எச்சரிக்கை செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். ராசிபுரத்தில் கைது செய்யப்பட்ட ஏசி மெக்கானிக், சித்தேஸ்வர பிரபு என்பவர், பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.